சசிகலா வருகையால் அ.தி.மு.க. கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது-சேலத்தில் எச்.ராஜா பேட்டி
சசிகலா வருகையால் அ.தி.மு.க. கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது, என்று சேலத்தில் பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
சேலம்:
சசிகலா வருகையால் அ.தி.மு.க. கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது, என்று சேலத்தில் பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
கூட்டம்
பா.ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் நெசவாளர் மற்றும் ஜவுளித்துறை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கி பேசினார். மாநில துணைத்தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறுபான்மையினர் அணி மாநில துணைத்தலைவர் ஷா, நெசவாளர் பிரிவு பாலமுருகன், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
கூட்டத்துக்கு பின்னர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஒரு சில மாநிலங்களில் இருந்து மட்டுமே உருவாகியுள்ளது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போராட்டம் ஆகும். மத்திய அரசின் நன்மதிப்பை கெடுப்பதற்காக கடந்த 26-ந் தேதி நடந்த விவசாயிகள் பேரணியின் போது வன்முறையை தூண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் போலீசார் பொறுமையாக கடமையாற்றியதால் எந்த பிரச்சினையும் உருவாகவில்லை.
8 வழிச்சாலை
ஜனநாயக மரபுகளை மீறி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது முறையல்ல. எனவே விவசாயிகளிடம் அந்த சட்டத்தில் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பேசுவதற்காக மத்திய அரசு தயாராக உள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருத்து கூறி வரும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அவசியமானது. ஊழல் பற்றி தி.மு.க. பேசக்கூடாது. மார்ச் 15-ந் தேதிக்குள் தமிழகத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும்.
கூட்டணி
சசிகலா வருகையால் அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. சசிகலாவை அ.தி.மு.க.வுடன் இணைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story