மலேசியாவில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத்தர வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் மனு


மலேசியாவில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத்தர வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் மனு
x
தினத்தந்தி 11 Feb 2021 3:30 AM IST (Updated: 11 Feb 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத்தர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் மனு கொடுத்தனர்.

ஈரோடு
மலேசியாவில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத்தர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் மனு கொடுத்தனர்.
மலேசியாவில் வெல்டிங் வேலை
ஈரோடு மோளக்கவுண்டன் பாளையம் காந்திபுரம் பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதம் மற்றும் அவரது மனைவி உமா பாரதி ஆகியோர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
நாங்கள் ஈரோட்டில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுடைய மகன் கவுதம் (வயது 22) 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வெல்டிங் பட்டறையில் வேலைக்கு சென்று வந்தான். இதில் சரியான வருமானம் இல்லை. இதைத்தொடர்ந்து வெளிநாட்டு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜெண்டாக உள்ள கோவையை சேர்ந்த எங்களுடைய உறவினர் ஒருவர் மூலம், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வெல்டிங் வேலைக்காக எனது மகன் மலேசியா நாட்டுக்கு சென்றான்.
பாஸ்போர்ட் பறிப்பு
மறுநாள் 1-ந்தேதி மலேசியா வந்துவிட்டதாக எனது மகன் போன் மூலம் தெரிவித்தான். அதன் பின்னர் 2 முறை உறவினர் மூலம் ரூ.25 ஆயிரம் எங்களிடம் கொடுத்தான். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பலமுறை தொடர்பு கொண்டும் எங்கள் மகனுடன் பேச முடியவில்லை. இது குறித்து உறவினரிடம் கேட்டபோது அவர் முறையாக பதிலளிக்கவில்லை. போன் செய்தாலும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி என் மகனிடம் இருந்து மற்றொரு எண்ணில் அழைப்பு வந்தது. அப்போது அவன், தனது செல்போன், பாஸ்போர்ட் எல்லாவற்றையும் ஒரு கும்பல் பறித்து கொண்டது என்றும், கடந்த 8 மாதங்களாக யாரிடமும் பேச அனுமதிக்காமல் ஒரு காட்டில் மறைத்து வைத்திருப்பதாகவும், என்னை காப்பாற்றுங்கள் என்றும் தெரிவித்தான். அதைத்தொடர்ந்து அந்த போன் எண்ணும் துண்டிக்கப்பட்டது.
பணம் கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு ஒரு எண்ணில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய நபர் ‘உங்கள் மகனை அனுப்ப வேண்டும் என்றால் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுக்க வேண்டும்’ என்று மிரட்டினார். அதற்கு நாங்கள் எங்களுடைய மகனை பேச சொல்லுங்கள் நாங்கள் பணம் தர தயாராக இருக்கிறோம் என்று கூறினோம்.
ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். பின்னர் எங்களுடைய மகன் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனது மகன் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே தயவு செய்து எனது மகனை மலேசியாவில் இருந்து மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story