பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
குஜிலியம்பாறை அருகே பள்ளிக்கூட கட்டிடத்தின் சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி ஆணைகவுண்டன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமையாசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் இங்கு பணிபுரிகின்றனர்.
கடந்த 1996-97-ம் கல்வியாண்டில், புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. அதன்பிறகு அந்த கட்டிடம் கடந்த 2018-19-ம் ஆண்டு பராமரிப்பு செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூட கட்டிடத்தின் (சன்சைடு) சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் கான்கிரீட் கம்பிகள் வெளியே தொங்கி கொண்டிருக்கின்றன.
கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிக்கூடம் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாணவ-மாணவிகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு பள்ளி கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில், பள்ளி திறந்த பிறகு எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது என்றனர்.
பள்ளி கட்டிடத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் குஜிலியம்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story