ஈரோட்டில் பட்டப்பகலில் பயங்கரம் தலையில் கல்லைப்போட்டு 2 வாலிபர்கள் படுகொலை; கோர்ட்டில் ஆஜர் ஆகிவிட்டு வந்தபோது சம்பவம்
ஈரோட்டில் கோர்ட்டில் ஆஜர் ஆகிவிட்டு வெளியே வந்த 2 வாலிபர்கள் பட்டப்பகலில் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் கோர்ட்டில் ஆஜர் ஆகிவிட்டு வெளியே வந்த 2 வாலிபர்கள் பட்டப்பகலில் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முன்னாள் குற்றவாளிகள்
ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் குணா என்கிற குணசேகரன் (வயது 29). கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடைய மகன் கலை என்கிற கலைச்செல்வன் (31). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். ஈரோட்டில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக இவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குணசேகரன், கலைச்செல்வன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பான வழக்கு நேற்று ஈரோடு விரைவு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக நேற்று குணசேகரனும், கலைச்செல்வனும் வீட்டில் இருந்து புறப்பட்டனர். இவர்களுடன், சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளும் கோர்ட்டில் ஆஜராக வந்தனர். நேற்று கோர்ட்டில் ஆஜராகிய அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
2 பேர் படுகொலை
வழக்கு விசாரணைக்கு பின்னர் அனைவரும் சேர்ந்து மது குடிப்பதற்காக வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு பொது கழிப்பிடத்தின் அருகே சென்றனர். மதியம் சுமார் 1.30 மணி அளவில் அங்கு மது குடித்துக்கொண்டு இருக்கும்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்கள் ஒரு கட்டத்தில் கும்பலாக தாக்கிக்கொண்டனர். இதில் கலைச்செல்வன், குணசேகரன் ஆகியோரை மற்றவர்கள் குறிவைத்து தாக்கினார்கள். அவர்கள் குணசேகரன், கலைச்செல்வன் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் குணசேகரன் அருகில் உள்ள சாக்கடையில் விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத மற்றவர்கள் அவரது தலையில் கல்லைப்போட்டு தாக்கினார்கள். இந்த தாக்குதலில் குணசேகரன் செத்தார்.
இதற்கிடையே கலைச்செல்வனும் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். அவரையும் கல்லால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். உடன் வந்த நண்பர்களையே படுகொலை செய்து விட்டு மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
தனிப்படை
இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகொலை செய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குணசேகரன், கலைச்செல்வன் ஆகியோர் குடிவெறி காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது மற்றவர்களால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்களா? என்ற விசாரணை நடந்து வருகிறது. கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வரும் போலீசார், கொலையாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
விசாரணை
கலைச்செல்வன், குணசேகரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதால், அந்த குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட யாரேனும், திட்டமிட்டு, அவர்களின் நண்பர்கள் மூலமாகவே 2 பேரையும் தீர்த்துக்கட்டினார்களா? அல்லது வேறு காரணங்களா? ஏற்கனவே நடந்த கொலை குற்ற விசாரணைக்கு உடன் வந்து ஆஜர் ஆனவர்கள்தான் இவர்களையும் கொலை செய்தனரா? அல்லது வேறு நபர்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாக்கடைக்குள் தள்ளி கொலை செய்யப்பட்ட குணசேகரன் அணிந்திருந்த ஆடைகள் கழற்றப்பட்டு கிடந்ததால் திட்டமிட்டு அவரை கொலை செய்ய முயன்றபோது, அதை தடுக்க வந்த கலைச்செல்வனும் கொல்லப்பட்டாரா? அல்லது 2 பேரையும் ஒரே நேரத்தில் தாக்கி திட்டமிட்டு கொலை செய்தனரா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அச்சம்
மேலும் அந்த பகுதியை சுற்றி உள்ள இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளனவா?. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனரா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதே நேரம் இந்த கொலை சம்பவம் பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது கழிப்பிடம் அருகே நடந்து உள்ளது. மதுக்குடித்தபோதுதான் அவர்கள் தகராறு செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாநகர் பகுதியில் லேசாக மறைவு உள்ள பகுதிகளில் கூட 2-க்கும் மேற்பட்டவர்கள் மது குடிக்க கூடி இருப்பதும், அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்படுவதும் சகஜமாக உள்ளது.
குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வழிகளில் லேசான நிழல் இருந்தால் கூட அங்கு 2 பேர் மது குடிப்பதற்கு ஒதுங்குவது பெண்கள் மற்றும் தனியாக செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே பொது இடங்களில் மது குடிப்பவர்களை போலீசார் துரத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story