மலைவாழ் மக்களின் நிலங்களுக்கு பட்டா
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மலைவாழ் மக்களின் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என கனிமொழி எம்.பி. கூறினார்
தளி
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மலைவாழ் மக்களின் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என கனிமொழி எம்.பி. கூறினார்.
தேர்தல் பிரசாரம்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க. சார்பில் கிராமங்கள் தோறும் மக்கள் சபை கூட்டம் மற்றும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்கள் சந்திப்பும் தேர்தல் பிரசார கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பள்ளபாளையத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
மனைப்பட்டா
பின்னர் திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பில் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது மலைவாழ் மக்கள் கூறுகையில், தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி, ஏற்படுத்தித் தருமாறும் தூய்மையான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், உயர்கல்வி பயில்வதற்கு தகுந்த நடவடிக்கையும், படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் அரசு வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு ஏதுவாக மலைவாழ்மக்களை எஸ்.சி. பிரிவில் இருந்து எஸ்.டி. பிரிவுக்கு மாற்றவும், பயிரிடும் விளை நிலங்களுக்கு பட்டா இல்லாததால் விவசாய கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை என்றும் அதனால் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விவசாயிகளுடன் சந்திப்பு
அதைத்தொடர்ந்து அங்கிருந்த 102 வயது மூதாட்டியை சந்தித்து நலம் விசாரித்துடன் அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் மலைவாழ் மக்களின் வீடுகள் மற்றும் அங்குள்ள தொடக்கப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி அணை பகுதியில் விவசாயிகளின் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி தரும்படியும், பி.ஏ.பி. பாசனத்தில் நடைபெறுகின்ற குளறுபடிகளை சீரமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்ததுடன் அதை மனுவாக அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிறிது தூரம் குதிரை வண்டியில் பயணித்தார். பின்னர் எரிசனம்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர் காலனியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் தேவனூர் புதூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
மக்கள் கிராம சபை கூட்டம்
இதைத்தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் நடந்தது.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது என்று சொல்லி என்னை அழைத்து வந்தார்கள் ஆனால் இன்று மகளிர் மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கும் இயக்கத்தின் நிர்வாகத்தின் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பேசிய சகோதரிகள் எல்லோரும் தங்களது கருத்துகளை ஆணித்தரமாக கூறியிருக்கிறார்கள். இங்கு பேசிய சகோதரி முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார். தலைவர் கலைஞர் ஆட்சியில் விவசாய கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் எல்லோருக்குமான திட்டங்களாக இருந்தன. திருமண உதவித் தொகையாக இருக்கட்டும், கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் தொகையாக இருக்கட்டும் அனைத்து மக்களுக்கும் பயன்பட்டது. முதல்-அமைச்சர் தொகுதியில் கியாஸ் குழாய்கள் விவசாய நிலத்தில் பதிக்கப்படுகிறது.
உலகளாவிய டெண்டர் போடுகிறோம் என்ற முறையில் யாரும் ஏமாற்ற முடியாது என்கிறார்கள். ஆனால் அந்த டெண்டர் அவர்களுடைய உறவினர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இப்படி எதை எடுத்தாலும் தனக்கு என்ன லாபம் என்று கணக்கிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் பாதிப்பு
.நீர்நிலைகளை தூர் வாருகிறோம் என்ற போர்வையில் கோடி கோடியாக பணம் செலவழிக்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த ஆட்சியில் ஒரு வேலையும் செய்யவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். எங்களுடைய ஆட்சியில் எல்லா குளங்களும் நிரம்பி வழிகிறது என்று. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நான் கேட்கிறேன் எல்லா உரிமைகளையும் மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்துவிட்டு சமூகநீதி, தமிழ்மொழி, தமிழர் அடையாளம் மாநில உரிமை அனைத்தையும் அடமானம் வைத்து விட்டீர்கள். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகள் 70 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தோடு அவர்களுக்கு எதிராக பெரிய பெரிய தடைகள் அமைத்துள்ளது மத்திய அரசு.
உரிமைகளுக்காக போராடுகிறார்
பொது வினியோகத் திட்டம் இனிமேல் கிடைக்காமல் போய்விடும். இப்படிப்பட்ட சட்டங்களை பதவியில் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரித்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்-அமைச்சர். அவர் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு பெருமை பேச என்ன இருக்கிறது. மு.க.ஸ்டாலின் போல எதிர் கட்சியில் இருந்தாலும் விவசாய சட்டங்களை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் அதற்கான போராட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்திக் கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மாநில உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் பணம் இருந்தால் போதும், பதவியில் இருந்தால் போதும் என்று எல்லாருக்கும் ஒட்டுமொத்தமாக துரோகம் செய்து கொண்டிருக்கிறார். அவர்தான் தமிழக முதல்-அமைச்சர். தமிழக ஆட்சியை நம்பி தொழிற்சாலைகள் வருவதற்கு தயாராக இல்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன. வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
முதலீடுகள் இல்லை
உடுமலை பஸ் நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பிரசார கூட்டங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக பங்கேற்கிறார்கள். ஏனென்றால் இந்த 10 ஆண்டு ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள் தான். இந்த ஆட்சியில் குடிநீருக்காக மணிக்கணக்கில் காத்திருப்பவர்கள் பெண்கள், ரேஷன் கடைக்குப்போய் விட்டு பல நாட்கள் வெறுங்கையோடு வருபவர்கள் பெண்கள்.பொருள் கேட்டால் கைரேகை வைக்கச்சொல்கிறார்கள். கைரேகை ஏறவில்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள். தரமற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் எதுவும் வருவதில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து 2 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் எந்த தொழிலும் இங்கு வரவில்லை.இதனால் தமிழகத்தில் 23 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story