சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை? தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை? தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2021 6:28 AM IST (Updated: 11 Feb 2021 6:28 AM IST)
t-max-icont-min-icon

சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தாம்பரம் தாசில்தாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டனர்.

சென்னை,

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. தாம்பரம் நகராட்சியின் கழிநீர் ஏரியில் விடப்படுகிறது. பலரால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பொதுப்பணித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அப்பகுதியில், குறிப்பிட்ட சர்வே எண்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. மேலும் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள் வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். கடந்த 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர்.


Next Story