திருவேற்காடு அருகே, குடியிருப்புவாசிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீடுகள் இடிப்பு - போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு
திருவேற்காடு அருகே குடியிருப்புவாசிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அப்போது போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
திருவேற்காடு அருகே பூந்தமல்லி - ஆவடி செல்லும் சாலையில் காடுவெட்டி பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் முடிவடையும் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 2 கோவில்களும் உள்ளன.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளும், கோவிலும் கட்டப்பட்டு இருப்பதாக கூறி வருவாய்துறை சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு சில வாரங்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்தனர். இதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புகளை காலி செய்ய மறுத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை பூந்தமல்லி தாசில்தார் சங்கர் தலைமையில் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
அப்போது வீட்டில் வசித்த பொதுமக்கள் வீட்டை காலி செய்ய மறுத்து போலீஸ் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளை இடிக்கும் போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர மறுத்தனர். இதையடுத்து பெண் போலீசார் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த மூதாட்டிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றினார்கள்.
இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடு, கோவில்களை இடித்து அகற்றினர். இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நாங்கள் 3 தலைமுறைகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். போதிய அவகாசம் கூட கொடுக்காமல் வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளி விட்டு வீடுகளை இடித்துள்ளனர். வீட்டிலிருந்த பொருட்களை கூட எடுக்க விடவில்லை. குழந்தைகள், வயதானவர்களுடன் நடுத்தெருவில் நிற்கிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு இடித்திருக்கலாம். நாங்கள் இனி எங்கே செல்வோம்.
இவ்வாறு கூறிவிட்டு கதறி அழுதனர்.
மொத்தம் 14 வீடுகள், 2 கோவில்களை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story