3 தெருக்களுக்கு போடப்பட்ட தரமற்ற தார் சாலை


3 தெருக்களுக்கு போடப்பட்ட தரமற்ற தார் சாலை
x
தினத்தந்தி 11 Feb 2021 6:22 PM IST (Updated: 11 Feb 2021 6:22 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் பேரூராட்சியின் 14-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 3 தெருக்களுக்கு போடப்பட்ட தரமற்ற தார் சாலையால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

சோளிங்கர்

சோளிங்கர் பேரூராட்சியின் 14-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 3 தெருக்களுக்கு போடப்பட்ட தரமற்ற தார் சாலையால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

தார் சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சி உட்பட்ட காந்தி ரோடு, சுப்பாராவ் தெரு (ஒரு பகுதி), பைராகி மடம் தெரு ஆகிய தெருக்களில் பேரூராட்சியின் 14-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 3 நாட்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. 

தார் சாலை போட்ட மூன்றே நாட்களில் சாலை முழுவதும் தாருடன் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கற்சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பாதிப்பாக உள்ளது. 

ஏற்கனவே இருந்த பழைய சாலைேய நன்றாக இருந்தநிலையில் தற்போது புதிதாக போட்ட தார் சாலையை அதிகாரிகள் உடனிருந்து கவனிக்காததால், தார்சாலை பெயர்ந்து கற்சாலையாக மாறி விட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். 

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு புதிய தரமான தார் சாலையாக போட வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

எம்.எல்.ஏ-அதிகாரி உறுதி

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர், தார் சாலை அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து சோளிங்கர் தொகுதி ஜி.சம்பத் எம்.எல்.ஏ. விடம் கேட்டபோது, தற்போது போட்ட தார்சாலை சரியில்லை என்பது தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தரமான தார் சாலை அமைத்துத் தருவேன், என்றார். 

மேலும் சோளிங்கர் பேரூராட்சி செயல் அலுவலர் செண்பகராஜன் கூறுகையில், இன்னும் தார் சாலை பணி முடியவில்லை. தரமான தார் சாலை அமைக்கப்படும், என்றார்.


Next Story