முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்


முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 11 Feb 2021 6:54 PM IST (Updated: 11 Feb 2021 6:54 PM IST)
t-max-icont-min-icon

தை அமாவாைசயையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சுருளி அருவியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், புண்ணியஸ் தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. 

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 

இந்த தடை 10 மாதங்களுக்கு பிறகு விலக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. 

எனினும் சுற்றுலா பயணிகள் அருவியை அருகே சென்று பார்க்கலாம் என்றும், குளிக்க அனுமதி இல்லை என்றும் வனத்துறையினர் அறிவித்தனர். 


இந்த நிலையில் தை அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பக்தர்கள் நீராட அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 


பக்தர்கள் குவிந்தனர்


இதனிடைேய தை அமாவாசையையொட்டி நேற்று சுருளி அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


பின்னர் பக்தர்கள் அருவியில் நீராட முயன்றனர். 

அப்போது வனத்துறையினர் அவர்களை தடுத்து, அருவியில் குளிக்க அனுமதி இல்லை என்று கூறினார்கள்.


இதனால் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பக்தர்கள் குளிக்காததால் அருவி வெறிச்சோடி காணப்பட்டது.


தர்ப்பணம்


பின்னர் பக்தர்கள் அங்குள்ள ஆற்றில் புனித நீராடிவிட்டு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

குறிப்பாக கும்பக்கரை அருவி, வைகை அணை, ஹைவேவிஸ் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். 

கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால் சுருளி அருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கவில்லை. 

சுருளி அருவியில் நீராடிவிட்டு தங்களின் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்ய தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ளோம். 

விசேஷ காலத்தில் கூட அருவியில் நீராட அனுமதி அளிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றனர்.


இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக சுருளி அருவியில் குளிப்பதற்கு அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. 

அரசு அனுமதி அளித்த பிறகுதான் அருவியில் அனைவரும் குளிக்க முடியும் என்றார்.


வீரபாண்டி

இதுபோல வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு ஆற்றில் நீராடினர்.

 மேலும் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் பக்தர்கள் மோட்ச விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

Next Story