நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது
தை அமாவாசையையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது.
நெல்லை:
தை அமாவாசையையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது.
தை அமாவாசை
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையன்று பத்ர தீப திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.
பத்ர தீபம் ஏற்றப்பட்டது
விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தலும், 11 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு மகேசுவர பூஜையும் நடந்தது. மாலை 6.30 தங்க விளக்கில் இருந்து தீபம் ஏற்றி சுவாமி சன்னதிக்கு சென்று விட்டு நந்தி முன்பு உள்ள நந்தி தீபம் மேளதாளம் முழங்க ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க தப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வந்தனர். அதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்களுடன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்பை
அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வரர் கோவில் செங்குந்தர் இளைஞர் அணி சார்பில் பத்திர தீப விழா நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் கோவில் முழுவதும் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சங்கு சபாபதி, சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருக சுவாமிநாதன், செங்குந்தர் சமுதாய தலைவர் சண்முகசுந்தரம், இளைஞரணி தலைவர் ஞான சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதபோல் அம்பை காசிநாதசுவாமி கோவிலிலும் பத்ரதீப விழா நடந்தது. விழாவில் கட்டளை தாரர் சேது முத்தையா குடும்பத்தினர் மற்றும் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவ ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story