நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளுடன் கிராமமக்கள் வாக்குவாதம் காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு
ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளுடன் கிராமமக்கள் வாக்குவாதம்
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து வீரானந்தபுரம் வரை 32 கிலோ மீட்டர் தூரம் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து புதிய சாலை அமைக்க சிதம்பரம் முதல் வீரானந்தம் வரை உள்ள 27 கிராமங்களில் இருந்த விவசாய நிலங்கள், கடைகள், வீடுகள், காலி வீட்டுமனைகள் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு முதல் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல கிராமங்களில் கையப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்த வீடுகள், கடைகள் அகற்றப்படாமல் இருந்தது.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இதற்கிடையே சாலை பணிக்காக இடம் கொடுத்த பொதுமக்கள் தங்களுக்கு குறைந்த இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாகவும், அரியலூர் மாவட்டத்தில் சாலை அமைக்க இடம் கொடுத்தவர்களுக்கு வழங்குவதுபோல் தங்களுக்கும் கூடுதலாக இழப்பீடு தொகை வழங்க கோரியும் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் 27 கிராமங்களை சேர்ந்த மக்கள் கூடுதல் இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இந்த நிலையில் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அதிகாரி சுரேஷ் தலைமையிலான குழுவினர் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாஸ் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் வீரானந்தபுரம் கிராமத்தில் சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமையில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், எவ்வித முன்அறிவிப்பின்றி எதற்காக ஆக்கிரமிப்பு அகற்ற வந்தீர்கள் எனவும், தங்களுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வேண்டும் எனவும் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய சங்க தலைவர் கைது
அப்போது அதிகாரிகள் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைபார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாய சங்க தலைவர் இளங்கீரன் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து நிறுத்தினர். உடனே போலீசார் விரைந்து வந்து பணியை தடுத்து நிறுத்திய இளங்கீரனை தாக்கினர். அப்போது அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். அதன்பிறகு அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிகிச்சை
இதற்கிடையே கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளங்கீரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார், இளங்கீரனை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
Related Tags :
Next Story