சரநாராயண பெருமாள் கோவிலில் 2 டன் பழங்களால் பந்தல் அமைப்பு
தை அமாவாசையையொட்டி பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் 2 டன் பழங்களால் பந்தல் அமைக்கப்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து மூலவர் சரநாராயண பெருமாள் புல்லாங்குழல் ஊதும் பிருந்தாவன கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் உற்சவர் சரநாராயணபெருமாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் முகப்பில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, செவ்வாழை, திராட்சை, கொய்யா, மாதுளை உள்ளிட்ட 2 டன் பழங்களை கொண்டு பழப்பந்தல் அமைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story