சசிகலா குடும்பத்துக்கு அ.தி.மு.க. அடிமையாக இருக்காது
எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் சசிகலா குடும்பத்துக்கு அ.தி.மு.க. அடிமையாக இருக்காது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குக்கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டு வாழ்ந்தவர். தற்போது முதல்-அமைச்சராக இருந்தாலும், பல பணி சுமை இருந்தாலும் மாதம் ஒரு முறை தனது கிராமத்திற்கு சென்று விவசாயம் பார்த்து வரும் உண்மையான விவசாயி. விவசாயி போலவே எளிமையாகவே அவர் வாழ்ந்து வருகிறார்.
நம்ப தயாராக இல்லை
ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படி கிடையாது. அவருக்கு விவசாயம், விவசாயிகள் படும் கஷ்டங்கள் பற்றி தெரியாது. அவர் பிறந்த விதம், வளர்ந்த விதம் வேறு.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும். மு.க.ஸ்டாலின் கூறுவதை யாரும் நம்பத்தயாராக இல்லை.
சட்டமன்ற உறுப்பினராகவும், மேயராகவும், தமிழக துணை முதல்-அமைச்சராகவும் இருந்தபோது செய்ய முடியாததை தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு செய்வேன் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இது எப்படி சாத்தியமாகும்.
அ.தி.மு.க. அடிமையாக இருக்காது
அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு சசிகலா தமிழகத்திற்குள் காரில் வந்த சம்பவம் தொடர்பாக சட்டம் நிச்சயம் தனது கடமையை செய்யும். சசிகலாவிற்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். முதலில் நீங்கள் உங்களை தினகரனிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
கட்சியையும், ஆட்சியையும் டி.டி.வி.தினகரனிடம் விட்டுவிட்டு சசிகலா சென்றார். ஆனால் ஒரே மாதத்தில் டி.டி.வி.தினகரன் அனைத்தையும் உடைத்து விட்டார். முதலில் அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையை காப்பாற்றிக் கொள்ள சொல்லுங்கள்.
அ.தி.மு.க. சாதாரண இயக்கம் அல்ல. 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம். தொண்டர்களின் உழைப்பு, ரத்தத்தில் உருவானது. இதில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு இடமில்லை. எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் சசிகலா குடும்பத்துக்கு அ.தி.மு.க. அடிமையாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story