கர்ப்பிணி வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் குறித்து தெரிவித்தால் கடும் நடவடிக்கை


கர்ப்பிணி வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் குறித்து தெரிவித்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Feb 2021 11:04 PM IST (Updated: 11 Feb 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணி வயிற்றில் வளரும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமுக நலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்திற்கான மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
பெண் குழந்தைகள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய ஏதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்ப்பது நம் அனைவருடைய கடமையாகும். 

குற்ற நடவடிக்கை 

பெண் சிசுக்கொலைகளை தவிர்க்கும் பொருட்டு ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும்போது, கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினத்தை( ஆணா?, பெண்ணா?) கண்டறிந்து கூறி இருப்பது தெரிந்தால் சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் ஸ்கேன் மையங்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து தக்க குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளுக்கு வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து அறிவுரை கூறுங்கள்.  ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.

இலவச தொழிற்பயிற்சி 

அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை கல்வி நெறிமுறைகள் குறித்து கற்பிக்க வேண்டும். மேலும் பெற்றோரிடமும் பெண் குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தினை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். 
குழந்தை திருமணத்தால் பாதிப்பிற்குள்ளாகும் நலிவுற்ற பெண் குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் அளிக்கும் வகையில் அக்குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி இலவசமாக வழங்குதல் குறித்தும், மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கு தனிசிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் பெற்றோர்களிடையே அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.  இவ்வாறு அவர் பேசினார். 
கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண  பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கெஜலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story