அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் உட்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான அமாவாசையான இன்று ஊஞ்சல் உற்சவம் உட்பிரகாரத்திலேயே நடைபெற்றது. இதையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் உட்பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர் பூசாரிகள் பக்தி மற்றும் தாலாட்டு பாடல்கள் பாடினர். தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனையும், தீபாரதனையும் நடைபெற்றவுடன் ஊஞ்சல் விழா முடிவடைந்தது. விழாவில் பூசாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story