புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி,
மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அமாவாசை சிறந்த நாளாகும். அதிலும் உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாய காலத்தில் (ஆடி மாதம்) வரும் அமாவாசையும் மிகவும் விசேஷமானது. தாய்-தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் தை, ஆடி மாத அமாவாசை அன்று திதி கொடுக்கலாம் என்பது ஐதீகம்.
தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் ஆறுகள், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட பிதுர் கர்மாக்கள் செய்வது இந்துக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மூதாதையர்கள் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவர் என்பது நம்பிக்கை.
அதன்படி தை அமாவாசை தினமான இன்று புதுவை கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறி படையலிட்டு பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொட்டி கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. கவுசிக பாலசுப்ரமணியர், லாஸ்பேட்டை சுப்ரமணியர், காமாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவர்கள் கடற்கரைக்கு மேளதாளம் முழங்க வந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதேபோல் சீகல்ஸ் ஓட்டல் அருகில் கடற்கரையில் ஹோமம் வளர்த்து சிலர் தர்ப்பணம் கொடுத்தனர்.
காரைக்காலில் நித்யக்கல்யாண பெருமாள் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரிக்காக எழுந்தருளினார். அங்கு பால், இளநீர் உள்பட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story