சின்னவெங்காயம் ரூ.100-ஐ தாண்டியது
சின்னவெங்காயம் ரூ100 ஐ தாண்டியது
போடிப்பட்டி:-
உடுமலை பகுதியில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டாலும் விவசாயிகளுக்கு பலன் தராததால் வேதனையடைந்துள்ளனர்.
அதிக செலவு
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் சின்ன வெங்காயம் தமிழகம் முழுவதும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் பருவம் தப்பிப் பெய்த மழையால் சின்ன வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகசூல் குறைந்த நிலையில் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் இது விவசாயிகளுக்கு பலன் தரவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மகசூல் இழப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சமீப காலங்களாகவே சின்ன வெங்காயம் சாகுபடி அதிக செலவு பிடிக்கும் சாகுபடியாக மாறிவிட்டது. வெங்காய விதை மற்றும் விதைக்காய்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. அத்துடன் இடுபொருட்கள், ஆள் கூலி என்று அனைத்து செலவுகளும் அதிகரித்து ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் அடிக்கடி மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் அடிக்கடி விலை சரிவையும் சந்திக்கிறோம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் போட்ட முதலை எடுப்பதற்கே சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. இந்த ஆண்டில் பருவம் தப்பிப்பெய்த மழையால் சின்ன வெங்காயப் பயிர்கள் அதிக அளவில் அழுகி சேதமானது. இதனால் குறைந்த அளவில் கிடைத்த மகசூலும் தரம் குறைவாகவே காணப்படுகிறது. தற்போது வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு மேல் விற்கப்படுகிறது.
விலை குறைந்தது
ஆனால் விவசாயிகளிடம் மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கிறார்கள். அதற்கு அழுகல் உள்ளிட்ட சேதங்களை நீக்கி விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளதாக காரணம் சொல்கிறார்கள். சின்ன வெங்காய விலை உச்சம் தொட்டுள்ளதால் சில்லறை விற்பனையும் குறைகிறது. ஆண்டுதோறும் சின்ன வெங்காயம் அதனை உரிக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கும் கண்ணீரை வரவழைக்கக்கூடியதாகவே உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story