சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி டிரைவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி டிரைவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுச்சேரி,
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் ரமண நகரை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 32). லாரி டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டிற்கு வெளியே விளையாடிய 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் திருபுவனை போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் அப்போதைய திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து முகமது உசேனை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வந்தது. சிறப்பு அரசு வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடி வந்தார்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பு கூறினார். அவர் முகமது உசேனுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டும், கற்பழிப்பு குற்றத்துக்காக 10 ஆண்டும் கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் இரு குற்றங்களுக்கும் தனித்தனியே தலா ரூ.1000 அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story