முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்


முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
x
தினத்தந்தி 11 Feb 2021 7:30 PM GMT (Updated: 11 Feb 2021 7:30 PM GMT)

முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

புதுக்கோட்டை,
தை அமாவாசை
தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில், இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் விரதம் இருந்து இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. அதன்படி தை அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலையில் இருந்தே புதுக்கோட்டையின் மையப்பகுதியில் உள்ள சாந்தநாதசுவாமி கோவில் அருகே உள்ள பல்லவன் குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
தர்ப்பணம் பின்னர் அவர்கள் தங்களது வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், வாழை இலையில் அரிசி, தேங்காய், பூ, பழம் போன்ற பல்வேறு பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுத்து குளத்தில் பிண்டம் கரைத்து புனித நீராடினர். இதனையொட்டி, பல்லவன் குளக்கரையில் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல, பூசத்துறையில் உள்ள வெள்ளாற்று கரையில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து நீராடினர்.
மணமேல்குடி
இதேபோல, மணமேல்குடி கோடியக்கரையில் வெளியூர் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்கள் குடும்பம், குடும்பமாக வந்து குவிந்தனர். மேலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோடியக்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மணமேல்குடி நகர போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்புக்குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் அருகே உள்ள திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் வெள்ளாற்று ஆற்றங்கரையின் வடபுறத்தில் அமைந்துள்ளது. இங்கு, தை மாத அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள், பசுமாட்டிற்கு கீரைகள் கொடுத்து புரோகிதரை வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் திருவரங்குளம் திருகுளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

Next Story