மதுரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
மதுரையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் இதுவரை இந்த மாதத்தில் மட்டும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
மதுரை
மதுரையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் இதுவரை இந்த மாதத்தில் மட்டும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு பாதிப்பு
மதுரையில் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மழைக்காலமாக இருந்ததால், டெங்கு காய்ச்சலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக மதுரையில் ஜனவரி மாதத்தில் மட்டும் 68 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 34 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 34 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதுபோல், பிப்ரவரி மாதத்தில் இதுவரை 38 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 16 பேர் புறநகர் பகுதியிலும், 22 பேர் நகர் பகுதியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் சிகிச்சையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருந்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. அதாவது 2020 ஜனவரி மாதத்தில் மட்டும் 102 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 68 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்னர். கொரோனா முன்எச்சரிக்கை பணியுடன் சேர்த்து டெங்கு ஒழிப்பு பணியும் செய்யப்பட்டிருந்ததால் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வருடம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 106 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதுபோல், உயிரிழப்புகளும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
வழக்கமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது வழக்கம். அதனை தடுக்கும் நடவடிக்கையாக நகர் மற்றும் புறநகர் பகுதியில் பணியாளர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தற்போதும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
புறநகர் பகுதியை காட்டிலும் நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் நகர் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்படுகிறது. யாருக்காவது காய்ச்சல், தலைவலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொண்டு அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும்.
தற்போது கொரோனா பாதிப்பும் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். டெங்குவாக இருந்தாலும், கொரோனாவாக இருந்தாலும் பயப்பட தேவையில்லை. விழிப்புணர்வுடன் இருந்தால், அதில் இருந்து எளிதாக மீண்டு வரலாம் என்றார்.
Related Tags :
Next Story