ரூ.17½ லட்சம் மோசடி செய்த தம்பதியினருக்கு 3 ஆண்டு சிறை
நாட்டு கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி ரூ.17½ லட்சம் மோசடி செய்த தம்பதியினருக்கு கோவை கோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
கோவை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45), இவரது மனைவி செல்வமணி (42). இவர்கள் இருவரும் பெருந்துறையில் நாட்டு கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி வந்து உள்ளனர்.
இதில் ரூ.1½ லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு பராமரிப்பு நிதியாக மாதம் ரூ.6 ஆயிரம் மற்றும் ஆண்டு போனஸ் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.
மேலும் 36 மாதங்கள் கழித்து முதலீட்டு தொகையான ரூ.1½ லட்சம் திருப்பி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளனர். அவர்களுக்கு ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி உரிய பணத்தை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2016-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கம், செல்வமணி ஆகியோரை கைது விசாரணை நடத்தினர். இதில் கணவன், மனைவி இருவரும் 9 பேரிடம் ரூ.17 லட்சத்து 68 ஆயிரம் பண மோசடி செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, தம்பதிகளான ராமலிங்கம், செல்வமணி ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இந்த அபராத தொகையை முதலீட்டாளர்கள் 9 பேருக்கும் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story