வாழை கழிவுகளின் மூலம் விமான பாகம் தயாரிக்கலாம்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்


வாழை கழிவுகளின் மூலம் விமான பாகம் தயாரிக்கலாம்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2021 11:25 PM GMT (Updated: 11 Feb 2021 11:28 PM GMT)

வாழை கழிவுகளை பயன்படுத்தி விமான பாகம் தயாரிக்கலாம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

திருச்சி, 

திருச்சி போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நேற்று வாழைத்தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி அவற்றை ஆக்கப்பூர்வமான பொருட்களாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கவுன்சிலின் துணைத்தலைவருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-

வாழையில் நிலையான கழிவு மேலாண்மைக்கு எனது பங்களிப்பு எப்போதும் உண்டு. வாழை அறுவடைக்கு பிறகு சுமார் 80 மில்லியன் டன் கழிவு பொருட்கள் வீணாகிறது. மிகப்பெரிய தொழில்துறை இருந்தபோதிலும் அது நன்கு பயன்படுத்தப்படுவதில்லை. 

வாழை நாரை பிரித்து எடுத்த பிறகு உருவாக்கப்படும் கழிவுகளை ஒலி பேனல்கள் மற்றும் விமான பாகங்களை தயாரிக்க பயன்படுத்தலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் கார்பன் அளவைக் குறைப்பதற்கும் வாழைப்பட்டை சாறு ஒரு சிறந்த ஊட்டசத்தாக பயன்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையும், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமாவும் கையெழுத்திட்டனர். இந்திய விவசாய பொறியியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ரவீந்திரன் நாயக் ஆகியோரும் பங்கேற்றனர். தொடக்கத்தில் முதன்மை விஞ்ஞானி ரவி வரவேற்றார். முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Next Story