தேர்தல் நெருங்குவதால் கோவையில் களைகட்டும் கட்சி கொடி தயாரிப்பு பணி
தேர்தல் நெருங்குவதால் கோவையில் கட்சி கொடி தயாரிப்பு பணி களைகட்டுகிறது.
கோவை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரப்போகுது. எப்போதும் என்றாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். தேர்தல் வரும் முன்னே..தேர்தல் பிரசாரம் வரும் முன்னே என்று அரசியல் கட்சியினரும் இப்போதே தீவிர பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் கட்சி கொடிகள் தயாரிப்பு பணி கோவையில் களைகட்டுகிறது. கோவை டவுன்ஹால், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கட்சி கொடிகள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து டவுன்ஹால் பகுதியில் உள்ள கொடி விற்பனையாளர் கூறியதாவது: கட்சி கொடிகள், பருத்தி, மைக்ரோ கிளாத், வெல்வெட், பாலிஸ்டர் துணிவகைகளை கொண்டு 8-க்கு 10 அங்குலம் முதல் 40-க்கு 60 அங்குலம்வரை பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கிறோம்.
அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ம.க. உள்ளிட்டஅனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இதில் சராசரி அளவான 20-க்கு 30 அங்குலம் அளவுள்ள கொடியைதான் அதிக அளவில் கட்சியினர் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள்.
நாங்கள் மொத்தமாக துணிவாங்கி அரசியல் கட்சியின் கொடியை வடிவமைத்து துணியில் அச்சேற்றுகிறோம். பின்னர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தையல் தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் தருகிறோம். அவர்கள் கொடிகளுக்கு ஓரம் கட்டுவதற்கு ஏற்ப தைத்து எங்களிடம் கொடுப்பார்கள்.
கோவை மட்டுமின்றி திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வருகிறது.
ஒருநாளைக்கு சராசரியாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம்வரை கொடிகளை தயாரிக்கிறோம். தற்போதுவரை ஏறத்தாழ 50 ஆயிரத்துக்கும அதிகமான கொடிகளை தயாரித்து வைத்துள்ளோம். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்டு வந்தோம்.
இப்போது கட்சி கொடிகள் தயாரிப்பு பணி எங்களுக்கு கைகொடுத்து உதவியுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story