உக்கடம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் அகற்றப்படும்- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
உக்கடம் மேம்பாலத்தின் இறங்குதளம் அமைக்கப்படுவதால் உக்கடம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
உக்கடத்தில் முதல்கட்ட மேம்பால பணிகள் ரூ.233 கோடி செலவில் 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டது. கரும்புக்கடையில் இருந்து ஆத்துப்பாலம்வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.265 கோடி செலவில் மேம்பால நீட்டிப்புக்கான பூமிபூஜை கடந்த 9-ந்தேதி போடப்பட்டது.
மேம்பால திட்டப்பணிகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உக்கடம் பஸ்நிலையம் அமைந்துள்ள பகுதியில் மேம்பாலத்தின் இறங்குதளம் அமைய உள்ளது. இதனால் பஸ்நிலையத்தின் வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்படும். பஸ்நிலையத்தின் பெரும்பகுதி மேம்பாலத்துக்காக சென்றாலும், வெள்ளலூரில் புதிய பஸ்நிலையம் அமையும்போது நிலைமை சீராகிவிடும்.
பஸ்நிலையத்தை ஒட்டி உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இதனை தரையில் பதிக்கும் பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடிவடையும். 2-ம் கட்ட மேம்பால பணிகளும் இனி துரிதமாக நடைபெறும். முழுபணிகளும் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேம்பால பணியையொட்டி ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
தற்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்துக்காக வாகனங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன. கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைப்பதற்காக பள்ளம்தோண்டும்போது போக்குவரத்து மீண்டும் மாற்றி அமைக்கப்படும்.
உக்கடம் பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டுள்ளதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை அவினாசி ரோட்டில் மேம்பால தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இதையொட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க பஸ்நிறுத்தங்கள் அனைத்தும் அகற்றப்படும். கோவை நகரில் 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்பட மொத்தம் 103 போக்குவரத்து சந்திப்புகள் உள்ளன.
இவற்றில் பணியமர்த்த 370 போலீசார் தேவை. ஆனால் தற்போது 130 போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர். போக்குவரத்து பணிநேரம் மாற்றி அமைக்கப்பட்டு நிலைமை சமாளிக்கப்படுகிறது.
காலை 8 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையும் அனைத்து போக்குவரத்து சந்திப்பு பகுதிகளிலும் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கோவை நகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விபத்தில் 8 பேர் உயிரிழநதனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 பேர் இறந்தனர். இந்த மாதம் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து உயிரிழப்புகளை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story