காஞ்சீபுரம் அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் சாவு - 3 பேர் படுகாயம்


காஞ்சீபுரம் அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் சாவு - 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Feb 2021 8:24 AM IST (Updated: 12 Feb 2021 8:24 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

சென்னை ஆவடி குமரன் நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). இவருடைய உறவினர்கள் சேகர் (55), விஜயலட்சுமி (38), வைஷ்ணவி (29). இவர்கள் சித்தூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் என்ற இடத்தில் இவர்கள் வந்தபோது கார் சாலையின் இடது புறம் உள்ள ஒரு கல்லின் மீது ஏறி இறங்கியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.

இதில் காரை ஓட்டி வந்த மனோகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இவர்களில் சேகர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story