மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி - மேலும் 2 பேர் மாயம்


மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி - மேலும் 2 பேர் மாயம்
x
தினத்தந்தி 12 Feb 2021 10:03 AM IST (Updated: 12 Feb 2021 10:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலியானார். மாயமான மேலும் 2 பேரை தீயணைப்பு படையினர் தேடி வருகிறார்கள்.

சென்னை,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாஜி (வயது 18). இவர், தனது நண்பர்களான கோபிசாந்த், ஆகாஷ், ராஜசேகர், சிவபிரசாத் ஆகிய 4 பேருடன் சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக நேற்று சென்னை வந்தார்.

கல்லூரியில் பணிகள் முடிந்ததும் நண்பர்கள்5 பேரும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். கடலை பார்த்ததும் உற்சாக மிகுதியில் சிவபாஜி உள்ளிட்ட 5 பேரும் கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிவபாஜி, கோபிசாந்த், ஆகாஷ் ஆகியோர் சிக்கிக் கொண்டனர். 3 பேரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் மற்றும் சிவபிரசாத் இருவரும் தங்கள் நண்பர்கள் 3 பேரையும் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

மெரினாவில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு படையினர் உடனடியாக கடலில் ராட்சத அலையில் சிக்கிய வாலிபர்களை படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சிறிதுநேர தேடலுக்கு பிறகு சிவபாஜியை மட்டும் பிணமாக மீட்டனர். ராட்சத அலையில் சிக்கி அவர் பலியாகி விட்டார். மற்ற 2 வாலிபர்களும் மாயமாகிவிட்டனர். அவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தீயணைப்பு படையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story