பிரதமர், கவர்னர் பெயரை பயன்படுத்தி ரூ.100 கோடி சுருட்டிய கர்நாடக கும்பல் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


பிரதமர், கவர்னர் பெயரை பயன்படுத்தி ரூ.100 கோடி சுருட்டிய கர்நாடக கும்பல் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 12 Feb 2021 5:50 AM GMT (Updated: 12 Feb 2021 5:50 AM GMT)

பிரதமர், கவர்னர் பெயரை பயன்படுத்தி ரூ.100 கோடி சுருட்டியதாக, கர்நாடக மோசடி கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிலர் சென்னை தியாகராயநகரில் வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்தனர். இவர்கள் பிரதமர் மற்றும் தமிழக கவர்னர் பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடி லீலைகளை தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகம், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரங்கேற்றி வந்தனர்.

பாரதீய ஜனதா கட்சியில் ராஜ்ய சபா எம்.பி. சீட் வாங்கி தருவதாகவும், பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவி போன்ற பல்வேறு பதவிகளை பெற்றுத்தருவதாகவும் இவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். இதற்காக கவர்னர் மாளிகையின் இ மெயில் முகவரி மற்றும் பிரதமர் அலுவலகத்தின் இ மெயில் முகவரி போன்றவற்றை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

இந்த கும்பலிடம் எம்.பி. சீட் கேட்டு சென்னை தொழில் அதிபர் ஒருவரும், சினிமா பட அதிபர் ஒருவரும் தலா ரூ.1½ கோடி கொடுத்து ஏமாந்துள்ளார்கள். மத்திய அரசு டெண்டர் வாங்கி தருவதாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரிடம், ரூ.18 கோடி கமிஷன் தொகையாக பெற்று ஏமாற்றி உள்ளனர். பெண் அதிகாரி ஒருவரும் இவர்களின் மோசடி வலையில் விழுந்து பணத்தை இழந்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கில் இருந்து காப்பாற்றுவதாக சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளனர். இதற்காக சி.பி.ஐ.போலீஸ் இயக்குனரின் பெயரில் போலியாக ஒரு சிபாரிசு கடிதம் தயாரித்து கொடுத்துள்ளனர். இப்படி இவர்கள் மெகா மோசடி அட்டூழியத்தில் ஈடுபட்டு ரூ.100 கோடி வரை பணத்தை சுருட்டி உள்ளதாகவும், இந்த கும்பல் மீது கடும் நடவடி க்கை எடுக்க வலியுறுத்தியும், சி.பி.சி.ஐ.டி.போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசில் புகார் கொடுக்கப்பட்டது தெரிய வந்தவுடன், இந்த மோசடி கும்பல், சென்னை தியாகராயநகரில் நடத்தி வந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இந்த கும்பல் கர்நாடக மாநிலம் மைசூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சி.பி.சி.ஐ.டி.தனிப்படை போலீசார் மைசூர் விரைந்தனர்.

மைசூரில் வைத்து மோசடி கும்பலின் தலைவன் மாதவய்யா என்ற மகாதேவன் அய்யா (வயது 55), அவரது மகன் அங்கிட் (29) மற்றும் ஓசூரைச் சேர்ந்த இடைத்தரகர் ஓம் (49) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மூவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story