தூத்துக்குடியில் காணாமல் போன 61 செல்போன்கள் மீட்பு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 61 செல்போன்களை தனிப்படை போலீசார் மீட்டனர். அந்த செல்போன்கள் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 61 செல்போன்களை தனிப்படை போலீசார் மீட்டனர். அந்த செல்போன்கள் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனிப்படை
தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் காணாமல் போனதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன், பெர்லின் பிரகாஷ், போலீஸ்காரர்கள் சாபு, சதீஷ்குமார், எடிசன், புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
மீட்பு
அதன்படி சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே 162 செல்போன்களை மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் காணாமல் போன மேலும் 61 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து பேசினார்.
விழிப்புணர்வுடன்...
அப்போது, செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்து இருக்கலாம். வங்கி விவரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விவரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்க வேண்டாம். கவனம் இல்லாமல் உங்கள் செல்போன் தொலைந்து விட்டால், அதை அவர்கள் பல்வேறு சட்டவிரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும். ஆகையால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story