அரசு திட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்க மறுப்பதை சகித்துக்கொள்ள முடியாது; வங்கி அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை


அரசு திட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்க மறுப்பதை சகித்துக்கொள்ள முடியாது; வங்கி அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2021 6:36 PM IST (Updated: 12 Feb 2021 6:36 PM IST)
t-max-icont-min-icon

அரசு திட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்க மறுப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்று வங்கி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகார்கள் வருகின்றன

முதல்-மந்திரி எடியூரப்பா, பிரதமர் அவாஸ் திட்டம், முதல்-மந்திரியின் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் குறித்து வங்கித்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

வீட்டு வசதி திட்டங்களில் சில வங்கிகள் பல்வேறு ஆவணங்களை கேட்பது குறித்த தகவல் எனது கவனத்திற்கு வந்துள்ளது. அனைத்து ஆவணங்களையும் வழங்கிய பிறகும் மத்திய-மாநில அரசின் திட்டங்களின் பயனாளிகளுக்கு கடன் வழங்க மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாது. வங்கிகள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் பல புகார்கள் வருகின்றன. தொழில்நுட்ப ரீதியான காரணத்தை முன்வைத்து கடன் வழங்க மறுப்பது சரியா?.

பிரதமரின் விருப்பம்
கடன் வழங்குவதில் கர்நாடகம் 5-வது இடத்தில் உள்ளது. இதனால் நீங்கள் மக்களுக்கு சொல்லும் தகவல் என்ன?. நீங்கள் சரியான முறையில் கடன் வழங்கவில்லை என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் கடன் கிடைக்க வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம். கடன் வழங்குவதை தாமதப்படுத்தினால், அரசு செயல்படுத்தும் திட்டங்களின் நோக்கம் நிறைவேறாது.

இந்த மாத இறுதிக்குள் கடன் வழங்குவதில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். கடன் வழங்குவதில் கர்நாடகம் முதல் இடத்திற்கு வர வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் கடன் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பட்ஜெட் தயாரிப்பு
அதைத்தொடர்ந்து பட்ஜெட் தயாரிப்பு குறித்து பல்வேறு துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். நீர்ப்பாசனத்துறை, வீட்டு வசதி, விவசாயம், சுகாதாரம், தோட்டக்கலை, நகர வளர்ச்சி, பெங்களூரு வளர்ச்சி ஆகிய துறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story