காவேரிப்பாக்கத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்


காவேரிப்பாக்கத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2021 7:56 PM IST (Updated: 12 Feb 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கத்தில் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து நேற்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

காவேரிப்பாக்கம்

கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பாலாற்றங்கரையில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கான பைப்லைன்  காவேரிப்பாக்கம், பாணாவரம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் சோளிங்கர், பாணாவரம் வழியாக வேலூர் மற்றும் காவேரிப்பாக்கம் வரும் வாகனங்கள் காவேரிப்பாக்கம் பஸ்  நிலையத்திலிருந்து கொண்டாபுரம், உப்பு மேட்டு காலனி, ஐயம்பேட்டை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவேரிப்பாக்கத்தில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். 

சாலை மறியல்

மேலும் பஜார் வீதி முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. வாகனங்கள் செல்லும்போது பறக்கும் தூசி கடை முழுவதும் பரவுகிறது.  போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென காவேரிப்பாக்கம் அனைத்து வணிகர் சங்கத்தினர் அதிகாரியிடம் முறையிட்டனர்.

ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வணிகர் சங்கத்தினர் நேற்று காவேரிப்பாக்கம் முழுவதும் கடையடைப்பு நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் காவேரிப்பாக்கத்தில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. மாலையில் கடைகள் திறக்கப்பட்டது.

Next Story