கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வீதி உலா


கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வீதி உலா
x
தினத்தந்தி 12 Feb 2021 9:05 PM IST (Updated: 12 Feb 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், மாசி திருவிழா: கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வீதி உலா

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. 


இந்த கோவிலின் மாசி திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. 

அதைத்தொடர்ந்து நேற்று அய்யப்பன் பூச்சொரிதல் கமிட்டி சார்பில் பூச்சொரிதல் விழா நடந்தது. 

இதற்கு கமிட்டி நிர்வாகி வி.சிவசக்தி நாகராஜ் தலைமை தாங்கினார். 

இதையொட்டி காலை 8.30 அளவில் கோவில் சார்பில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகள் ஏந்தி கோவிலை 3 முறை வலம் வந்து அம்மனுக்கு காணிக்கை பூக்களை செலுத்தினர்.

 கோட்டை மாரியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க முருகன், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகிய சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரின் முன்பு வாழை கற்பூர பூஜை செய்து திருஷ்டி கழிக்கப்பட்டது. 

பின்னர் பூத்தேர் ஊர்வலம் தொடங்கியது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 


இந்த ஊர்வலம் திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. 


இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு காணிக்கை பூக்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். 

இதைத்தொடர்ந்து பூத்தேர் கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பூக்கள் அம்மனின் கருவறையில் நிரப்பப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து காணிக்கை பூக்களை பிரசாதமாக பெற்று சென்றனர். 

இரவு கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.

Next Story