தொழிலாளி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


தொழிலாளி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 12 Feb 2021 9:46 PM IST (Updated: 12 Feb 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் விபத்தில் பலியான தொழிலாளி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெரியகுளம்:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதியில் இருந்து திருமலாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் இறந்தார். ரமேசுக்கு உமாபிரியா (32) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். 
இதைத்தொடர்ந்து உமாபிரியா, விபத்து நஷ்டஈடு கேட்டு பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு நீதிபதி திலகம், ரமேஷ் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈட்டை வழங்காமல் அரசு போக்குவரத்துக்கழகம் தாமதம் செய்தது. 
இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி நடந்த லோக் அதாலத் முகாமில் உமாபிரியாவுக்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு கொடுப்பதற்கு போக்குவரத்துக்கழக பணிமனை நிர்வாகம் சம்மதித்தது. ஆனால் அதன்பிறகும் பணம் தராமல் போக்குவரத்துக்கழகம் தாமதம் செய்தது. இதனால் உமாபிரியா, பெரியகுளம் கோர்ட்டில் நிறைவேறுதல் மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி திலகம், வட்டியுடன் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். 
அதன்படி, நேற்று காலை பெரியகுளம் பஸ் நிலையத்தில் மதுரைக்கு செல்வதற்கு தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு அமீனா ரமேஷ் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

Next Story