புதுவைக்குரிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்; மத்திய நிதி மந்திரியிடம், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
புதுவைக்குரிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரால் வலியுறுத்தப்பட்டது.
டெல்லியில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசியது குறித்து அவரது அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
டெல்லியில் மத்திய நிதி மந்திரியிடம் புதுவை மாநிலத்திற்கு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக வெளிமார்க்கெட்டில் ரூ.245 கோடி கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த பணம் இன்னும் புதுவைக்கு வந்து சேரவில்லை. எனவே இதனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரால் வலியுறுத்தப்பட்டது.
மேலும் மத்திய அரசு நிதி பங்கீடாக புதுவைக்கு கொடுக்க வேண்டியது ரூ.2,800 கோடி. ஆனால் பட்ஜெட்டில் ரூ.1,729 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்தது. இது கடந்த பட்ஜெட்டை விட ரூ.26 கோடி தான் கூடுதல் ஆகும். எனவே புதுவை மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தொடர்ந்து மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை சந்தித்து பேசினார். அவரிடம் புதுவை மாநிலத்தில் உள்ள பஞ்சாலைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு புதிதாக ஒரு ஜவுளி பூங்கா தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story