உத்தமபாளையத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய கும்பல் சிக்கியது
உத்தமபாளையத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய கும்பல் சிக்கியது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பகுதியில் சமீப காலகமாக மோட்டார் சைக்கிள்கள் திருடுபோகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது.
இதைத்தொடர்ந்து உத்தமபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கும் வகையில் உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார், உத்தமபாளையம்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பட்டியில் இருந்து வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். உடனே அந்த வாலிபரை மறித்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிடிபட்ட வாலிபர், புதுப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் கவுதம் (வயது 31) என்பதும், அவரும், அதே ஊரை சேர்ந்த சரவணக்குமார் (36), காக்குவீரன் (46), நந்தகுமார் (22), புகழ் (27) ஆகிய 4 பேரும் சேர்ந்து உத்தமபாளையம் பகுதியில் கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கவுதமை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ெகாடுத்த தகவலின்பேரில் சரவணக்குமார், காக்குவீரன், நந்தகுமார், புகழ் ஆகியோரையும் கைது செய்தனர். இதுதவிர பிடிபட்டவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story