அணைக்கட்டு அருகே அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
அணைக்கட்டு அருகே பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து, தாசில்தாரை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அணைக்கட்டு
பாதை ஆக்கிரமிப்பு
அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட அப்புக்கல் அடுத்த மானிய கொல்லை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை அதேப் பகுதியை சேர்ந்த ஒருவர்் ஆக்கிரமிப்பு செய்து பாதையை நிலமாக மாற்றி உள்ளார். இதனால் பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியே வருவதற்கு வேறு பாதை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அணைக்கட்டு தாசில்தாரிடம் புகார் மனு அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட தாசில்தார் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவரிடம் விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முற்றுகை
இந்த நிலையில் நேற்று மீண்டும் மானியகொல்லை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் பழனியிடம் மனுவை கொடுத்து உடனடியாக வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அப்போது அவர்களுக்கும், தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாசில்தாரை முற்றுகையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
அதிகாரிகள் ஆய்வு
அதைத்தொடர்ந்து துணை தாசில்தார் பழனி, அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் முகமது சாதிக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆவணங்களை சரிபார்த்து, ஓடை புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு செய்த நபரின் பெயரில் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலெக்டர் இந்த இடத்தை ஆய்வு செய்து பாதை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் ஆதார் அட்டை, குடும்ப அட்டை அனைத்தையும் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு ஊரை விட்டு வெளியேறி விடுவோம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story