ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணி தொடக்கம்
கோடை சீசனையொட்டி ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது.
ஊட்டி,
கடந்த 1995-ம் ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 100-வது மலர் கண்காட்சியை நினைவு கூறும் வகையில், ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து ரோஜா ரகங்கள் கொண்டு வரப்பட்டு நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காவில் 4,201 ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். தொடர் மழை மற்றும் உறைபனியால் ரோஜா மலர்கள் குறைந்த அளவில் பூத்து குலுங்கியது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கவாத்து பணி தொடக்கம்
இந்த நிலையில் கோடை சீசனையொட்டி ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் பணியாளர்கள் ரோஜா செடிகளின் அடிப்பகுதியை வெட்டி கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் செடிகள் நன்றாக தளிர்ப்பதோடு, உரமிடுவதால் செழித்து வளரும். கவாத்து செய்யப்பட்ட செடிகளில் இருந்த ரோஜா பூக்கள் பறிக்கப்பட்டன.
பராமரிப்பு பணிகள்
மேலும் இயற்கை உரம் இடுவது, களை எடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, நோய்கள் ஏதேனும் தாக்காமல் இருக்க மருந்து தெளிப்பது, உறைபனியில் இருந்து அலங்கார செடிகளை பாதுகாப்பது போன்ற பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கவாத்து பணி காரணமாக நடப்பு மாதம் மற்றும் மார்ச் மாதம் ரோஜா மலர்களை பார்க்க முடியாது.
வருகிற ஏப்ரல் மாதம் முதல் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். அப்போது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story