சின்னவெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை
சின்னவெங்காயம் கிலோ ரூ140க்கு விற்பனை
திருப்பூர், பிப்.13-
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் சின்னவெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரத்து குறைவு
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு உடுமலை, குடிமங்கலம், பொங்கலூர், பல்லடம் உள்பட திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் சின்னவெங்காயம் கொண்டு வந்து மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் சின்னவெங்காயம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சின்னவெங்காயமே அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வருடம் பெரும்பாலான மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் சின்ன வெங்காய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு சின்னவெங்காய வரத்து குறையத்தொடங்கியது.
இதனால் சின்னவெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. பெரும்பாலான ஊர்களில் சின்னவெங்காயம் மழையால் அழுகியது. இதனால் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவு செய்த விவசாயிகளும் போட்ட முதலை எடுக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
திருப்பூரில் கடந்த வாரம் மொத்த விலையில் சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று சின்னவெங்காயம் கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்கப்பட்டது.பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பல்லாரி விலையும் தற்போது உயர்ந்து காணப்படுகிறது.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் கடந்த வாரம் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. ஆனால் நேற்று மொத்த வியாபாரக்கடையில் கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்கும், மளிகைக்கடைகளில் சில்லறை விற்பனையில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story