எடப்பாடி பழனிசாமிக்கு ஊழல்தான் செய்ய தெரியும் மு.க.ஸ்டாலின்


எடப்பாடி பழனிசாமிக்கு ஊழல்தான் செய்ய தெரியும் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Feb 2021 5:53 PM GMT (Updated: 12 Feb 2021 5:53 PM GMT)

எடப்பாடி பழனிசாமிக்கு சாதனை செய்ய தெரியாது, ஊழல்தான் செய்ய தெரியும் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்


உளுந்தூர்பேட்டை, 

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, புகார் பெட்டியின் மூலம் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரி‌ஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய தொகுதிகளை சேர்ந்த மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முன்னதாக மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து முக்கிய பிரச்சினைகள் குறித்து குறும்படமும் திரையிடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஊழல்தான் செய்ய தெரியும் 

அ.தி.மு.க.வினர் சொல்லிக்கொள்ள எந்த சாதனைகளும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு சாதனைகள் செய்ய தெரியாது, அவருக்கு ஊழல் தான் செய்ய தெரியும் அல்லது ஊர்ந்து செல்ல தான் தெரியும்.
தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை எல்லாம், தனது திட்டம் போன்று சொல்லி வருகிறார். முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் தி.மு.க. கொண்டு வந்தது. சென்னை மெட்ரோ ரெயில், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், குடிமராமத்து பணிகள் கழக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டம் தான். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இப்படி பல்வேறு திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவை, உருவாக்கப்பட்டவை ஆகும். அதற்கும் சேர்த்து உரிமை கொண்டாடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

தம்பட்டம் அடிக்கும் முதல்-அமைச்சர் 

பொதுவாக கல்வி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார மேம்பாடு, வாழ்க்கைத் தரம் ஆகியன காலம் காலமாக வளர்ந்து வருவதன் அடிப்படையில்தான் கணக்கீடுகள் செய்யப்படும். அந்தந்த ஆண்டின் வளர்ச்சியாக சொல்ல முடியாது. கால் நூற்றாண்டு கால வளர்ச்சியை தனது 4 ஆண்டுகால வளர்ச்சியாக தம்பட்டம் அடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தடுப்பூசியை இலவசம் என்று சொல்கிறார். அரசாங்கத்தால் போடப்படும் தடுப்பூசி அனைத்தும் இதுவரை இலவசமாகத் தான் போடப்படுகிறது. 2,000 மினி கிளினிக் என்று கூறி, பழைய கிளினிக்கிற்கு பச்சை பெயிண்ட் அடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக சொல்கிறார். 3 ஆண்டுகாலமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்கு யார் காரணம்? மருத்துவ கல்லூரியை கடைசி காலத்தில் உருவாக்கினாரே தவிர முன்கூட்டியே உருவாக்கவில்லை.

காவிரி உரிமையை  இழந்துவிட்டோம் 

காவிரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் உரிமையை இழந்து நிற்கிறோம். ஏனெனில் காவிரி ஆணையமோ, மேலாண்மை வாரியமோ அமைக்கப்படாத காரணத்தினால் மத்திய ஜல்சக்தி துறையின் துணை செக்‌‌ஷனாக காவிரியை மாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றியதாக சொன்னாரே தவிர, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏன் அவர் தடுக்கவில்லை?
தனியாரிடம் கொள்ளைவிலை கொடுத்து மின்சாரம் வாங்கிக் கொண்டு, தமிழகம் மின் மிகை மாநிலம் என்று தம்பட்டம் அடிக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பேசுகிறீர்களே, அதுகுறித்து வெள்ளை அறிக்கை பலமுறை கேட்டேன். இதுவரை தரவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று கோவை, சென்னையை சொல்லி உள்ளார். பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா?

வெற்று நடைபோடும் தமிழகம் 

இது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல வெற்றுநடை போடும் தமிழகமாக இன்று உள்ளது. வெற்று நடை போடும் தமிழகத்தை எல்லா வகையிலும் கெத்து நடை போடும் தமிழகமாக மாற்ற தி.மு.க. ஆட்சி வர இருக்கிறது. இந்த தமிழகத்தை கெத்தா நடை போட வைக்க வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சியால் தான் முடியும்.
இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் கழக ஆட்சி அமையும் உங்கள் கவலைகள் தீரும்.
இவ்வாறு அவர் பேசினார். 


Next Story