ரவுடி சரமாரி வெட்டிக்கொலை


ரவுடி சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2021 1:03 AM IST (Updated: 13 Feb 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், முன்விரோதம் காரணமாக ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில், முன்விரோதம் காரணமாக ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரவுடி
மயிலாடுதுறை அருகே மேலபட்டமங்கலம் திடல் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் அருள்(வயது 34). மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் இவர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. 
இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு நெப்போலியன் என்பவரை கொலை செய்த வழக்கு இருந்தது. இந்த வழக்கில் 2016-ம் ஆண்டு அருள் விடுதலை செய்யப்பட்டார். 
சரமாரி வெட்டிக்கொலை
இந்த சம்பவத்திற்கு பிறகு அருள் தனது பெற்றோருடன் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை வந்த அருள், நேற்று அதிகாலை 4 மணி அளவில் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் மர்ம நபர்களால் தலையில் 3 இடங்களில் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். 
3 பேர் கைது
இதுகுறித்து தகவலறிந்ததும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அருளின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த கொலை தொடர்பாக மேல பட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த நல்ல தம்பி மகன் பாலகிருஷ்ணன் (23) திருவிழந்தூர் பகுதியை சேர்ந்த பாபு மகன் சூர்யா(23), முட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கனிவண்ணன்(27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
பழிக்கு பழி தீர்த்தனர்
போலீசாரின் விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிய வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டு இறந்த நெப்போலியனின் சகோதரர் பாலகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அருளை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. 
மேலும் பாலகிருஷ்ணனின் தந்தை நல்லதம்பி, அங்குள்ள அய்யனார் கோவில் குளத்தை குத்தகை எடுத்து மீன் பிடித்து வந்துள்ளார். அதற்கு அருள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ஊருக்குள் சிலரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார் பழுது பார்க்கும் கடையில் தூங்கிக்கொண்டு இருந்த அருளை, அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக தெரிகிறது. 
பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலேயே நடந்த இந்த கொலை சம்பவத்தால் மயிலாடுதுறை பகுதி முழுவதும் நேற்று பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story