பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்டத்தை தொடங்கப்போவதாக அரசு அறிவித்து, நிலங்களை கையகப்படுத்தியும், திட்டம் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஏர் உழவர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக சங்கத்தின் தலைவர் சுபா.இளவரசன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திருச்சி- சிதம்பரம் சாலையில் பயணியர் மாளிகை அருகே மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து, ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், விவசாயிகள் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க துணை தலைவர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகி செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். மீத்தேன் எதிர்ப்பு தமிழ் மண்ணுரிமை இயக்கம் ஜெயராமன், விருத்தாசலம் இளையராஜா, தமிழர் நீதிக்கட்சி மகளிரணி தலைவர் கவியரசி இளவரசன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, அனல் மின் திட்டத்தை ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தர வேண்டும், திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து 13 கிராமங்களில் கையகப்படுத்தியுள்ள நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 லட்சத்தை பொதுத்துறை நிறுவனம் வழங்கிட வேண்டும், அனல் மின் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யாத பட்சத்தில் அடுத்த கட்டமாக விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழர் நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story