ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8 ஆயிரத்தை தாண்டியது


ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குவிண்டால் மஞ்சள்  ரூ.8 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 Feb 2021 1:27 AM IST (Updated: 13 Feb 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8 ஆயிரத்தை தாண்டியது.

ஈரோடு
ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8 ஆயிரத்தை தாண்டியது. 
மஞ்சள் ஏலம்
மஞ்சள் மாநகரமாக திகழும் ஈரோட்டில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. பெருந்துறை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் நடைபெறுகிறது.
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் இந்த மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். அங்கு தரம் வாரியாக மஞ்சள் பிரிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மஞ்சளை பார்வையிட்டு வாங்கி செல்கிறார்கள்.
ரூ.8 ஆயிரம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மஞ்சளுக்கு தனி மவுசு ஏற்பட்டது. அப்போது ஒரு குவிண்டால் ரூ.16 ஆயிரம் வரை விற்பனையானது. அதன்பிறகு மஞ்சளின் விலை படிப்படியாக குறைந்தது. மேலும், உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை விவசாயிகள் விற்பனை செய்யாமல் குடோன்களில் பாதுகாத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக மஞ்சளின் விலை ஒரு குவிண்டாலுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த ஒரே மாதத்தில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்தை தாண்டியது.
40 சதவீதம் ஏற்றுமதி அதிகம்
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-
மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்து வருவதால், தேவை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 40 சதவீதம் ஏற்றுமதி அதிகமாகி உள்ளது. குறிப்பாக வங்களாதேசத்துக்கு மஞ்சள் ஏற்றுமதியாகிறது. மஞ்சளின் தேவை அதிகமாகி உள்ளதால், விலையும் உயர்ந்து உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் ஏற்கனவே இருப்பு வைத்த மஞ்சளையும் விவசாயிகள் தற்போது விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த புதிய மஞ்சள் தற்போது வர தொடங்கி இருக்கிறது. எனவே புதிய மஞ்சளின் வரத்தை பொறுத்து விலையில் மாற்றம் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story