உரிமம் பெறாத விதைகளை விற்றால் 7 ஆண்டு சிறை
உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போடிப்பட்டி,
ஒவ்வொரு பயிரிலும் மகசூலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விதைகள் உள்ளது. எனவே தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேளாண்மைத்துறை மூலம் அரசு மற்றும் தனியார் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விதைச்சான்றுத்துறையினரால் ஆய்வுகள் செய்யப்பட்டு விதைகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது.
இதனையடுத்து சான்று பெற்ற விதைகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் விதை விற்பனை நிலையங்கள் விதைச்சட்டங்களை முறையாக கடைபிடித்து விற்பனை மேற்கொள்கின்றனரா என்பதை கண்காணித்து தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் பணியில் விதை ஆய்வுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தை, மாசி பட்டங்களில் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள விதை விற்பனையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.
விதை விற்பனை நிலையங்களில் விதை உரிமத்தை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப் பண்ணைகளில் உள்ள அறிவிப்பு பலகையில் விதையின் பெயர், ரகம், நிலை, இருப்பு நிலை, விற்பனை விலை ஆகிய விவரங்களைப் பராமரிக்க வேண்டும்.
விதை இருப்புப்பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விதை விற்பனைப்பட்டியல் ஆகியவற்றை விதைச்சட்டப்படி பராமரிக்க வேண்டும். விதைப்பட்டியலில் கண்டிப்பாக விற்பவர் மற்றும் வாங்குபவரின் உரிமம் எண் குறிப்பிட வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு விதைச்சான்றுத்துறையால் வழங்கப்படும் பதிவெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கொள்முதல் செய்யப்படுகிற அனைத்து விதை குவியல் எண்களுக்கும் பணி விதை ஆய்வு அறிக்கையை உற்பத்தியாளரிடமிருந்து பெற்று விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் விதைகளின் ரசீதுகளில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகிய விவரங்களைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மேலும் அதில் விவசாயிகளின் கையொப்பம் மற்றும் விற்பனையாளரின் கையொப்பம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
கண்டிப்பாக விதைகளையும் உரத்தையும் அருகருகே இருப்பு வைத்து விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் விதைகளின் முளைப்புத்திறன் குறையும். மேலும் காலாவதியான விதைகளை இருப்பு வைக்கவோ விற்பனை செய்யவோ கூடாது. இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் விதைச்சட்டம், விதை விதிகள் மற்றும் விதைக்கட்டுப்பாட்டு ஆணையின்படி விதை விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் விதைச்சட்டப்படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story