ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது- 7 பேருக்கு வலைவீச்சு


ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது- 7 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Feb 2021 2:36 AM IST (Updated: 13 Feb 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நடந்த இரட்டை செய்யப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோர்ட்டில் ஆஜர்
ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் குணா என்கிற குணசேகரன் (வயது 29). கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடைய மகன் கலை என்கிற கலைச்செல்வன் (31). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். ஈரோட்டில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக இவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குணசேகரன், கலைச்செல்வன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த 10-ந் தேதி ஈரோடு விரைவு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகி விட்டு 2 பேரும் மதுக்குடிப்பதற்காக வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு பொது கழிப்பிடத்தின் அருகே சென்றனர்.
இரட்டை கொலை
அப்போது அங்கு மறைந்திருந்த 11 பேர் கொண்ட கும்பல் குணசேகரன் மற்றும் கலைச்செல்வனை கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டடது.  இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்த நிலையில் ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொலையாளி ஒருவர் பதுங்கி இருப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்து சென்று அங்கு மறைந்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் ராஜாஜி தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்கிற வேட்டை ரவி (24) என்பதும், குணசேகரன், கலைச்செல்வன் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவிச்சந்திரன் உள்பட 11 பேர் குணசேகரன், கலைச்செல்வன் ஆகியோரை கொலை செய்தது உறுதி ஆனது. இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி என்கிற காவலன் கார்த்தி (27), செட்டிபாளையம் கரும்பாறை இந்தியன் நகர் பகுதியை சேர்ந்த மதன் (26), வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரை சேர்ந்த அழகிரி (23) ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
7 பேருக்கு வலைவீச்சு
அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குணசேகரன், கலைச்செல்வன் கொலை வழக்கில் மேலும் தொடர்புடைய 7 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் 7 பேரும் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story