கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்
கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை மாநகராட்சியை கண்டித்து கோவை பீளமேடு ரொட்டி கடை மைதானத்தில், மாநகர் கிழக்கு மாவட்டம், பீளமேடு பகுதி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடி, சாலைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லாததால் நா.கார்த்திக் எம்.எல்ஏ. உள்பட 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பஸ் மற்றும் வேனில் தனியார் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமை தாங்கினார்.
தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story