பெண்களின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க.


பெண்களின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க.
x
தினத்தந்தி 13 Feb 2021 4:14 AM IST (Updated: 13 Feb 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

பெண்களின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க. என்று பல்லடத்தில் நடந்த மகளிர் சுய உதவிக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருப்பூர்
பெண்களின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க. என்று பல்லடத்தில் நடந்த மகளிர் சுய உதவிக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 
கண்ணின் இமைபோல் காத்தவர் 
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பல்லடத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார். இதற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிரு‌‌ஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., குணசேகரன் எம்.எல்.ஏ, விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மகேந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பெண்களை கண்ணின் இமைபோல் காத்தவர் ஜெயலலிதா. அதே வழியில் எனது தலைமையிலான அரசும் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. இந்தியா முழுவதும் மத்திய அரசு ஆய்வு செய்து, வெளியிட்ட அறிக்கையில் கோவை நகரம் பெண்கள் வாழ உகந்த பாதுகாப்பு நகரம் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெண்களை பாதுகாப்பதில் முன்னிலை பெற்று விளங்குகிறது. உள்ளாட்சி அமைப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆண்களை போல் பெண்களும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டது.
மகளிர் சுய உதவிக்குழு 
பெண்கள் நாட்டின் கண்கள் என்றார்கள். அதற்கு ஏற்ப ஏழை, எளிய குடும்ப பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் மூலமாக 15 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று அதிக முக்கியத்துவம் கொடுத்து வங்கி இணைப்பு கடனை ஜெயலலிதா வழங்கினார். அந்த வழியில் வந்த எனது தலைமையிலான அரசு ரூ.81 ஆயிரம் கோடி சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி வங்கி இணைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.12 ஆயிரம் என்பதை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழை, எளிய தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் சுகாதாரமாக இருக்க 16 வகையான பொருட்கள் 25 ஆயிரம் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கான்கிரீட் வீடுகள் 
கருவுற்ற தாய்மார்களுக்கு அம்மா மருத்துவ சஞ்சீவி திட்டம் மூலமாக 1 கோடியே 7 லட்சம் பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 2 லட்சத்து 84 ஆயிரம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்க தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைகளை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தின் சட்டங்கள் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் செயல்படுத்திய அரசு அ.தி.மு.க.
மாணவ-மாணவிகளின் வாழ்க்கை தரம் உயர பாடப்புத்தகங்கள், விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கப்பட்டது. பெற்றெடுத்த தாய் கூட இவ்வளவு வசதிகளை செய்து கொடுக்க முடியாது. ஆனால் பெற்றெடுக்காத தாயாக ஜெயலலிதா இருந்து இந்த திட்டங்களை வழங்கினார். ஏழை மாணவர்கள் கல்வி தொடர அதிக கல்லூரிகள் தொடங்கப்பட்டது. கிராமம் முதல் நகரம் வரை வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
ஏராளமான திட்டங்கள் 
வரும் காலத்தில் பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் வர இருக்கிறது. பெண்களின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க. அரசு. பெண்கள் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் தெரிவித்து அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரித்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


Next Story