மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க பள்ளிகளுக்கு முதல், 3-வது சனிக்கிழமைகளுக்கு விடுமுறை- அமைச்சரிடம் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை
மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க பள்ளிகளுக்கு முதல், 3-வது சனிக்கிழமைகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி அமைச்சரிடம் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அன்பரசு, செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் சுந்தரகுருமூர்த்தி ஆகியோர் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது உள்ள வழக்குகளால் பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு பலன் பெற முடியாமல் தவித்து வந்தநிலையில், துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய பரிந்துரை செய்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்களில் உள்ள தலைமை ஆசிரியர்கள் பதவிக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இந்த மாத இறுதிக்குள் நடத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை கொண்டு வந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2004-2006 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும். பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு புதிதாக வெளியிடப்பட்டு உள்ள அரசாணையின்படி நிர்வாகத்திறன் தேர்வுகள் எழுத வேண்டும் என்ற கட்டாயத்தை ரத்து செய்ய வேண்டும். தற்போது உள்ள பள்ளிக்கூட சூழ்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாதத்தின் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளை விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
Related Tags :
Next Story