நங்கவள்ளி அருகே காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல்


நங்கவள்ளி அருகே காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல்
x
தினத்தந்தி 13 Feb 2021 4:21 AM IST (Updated: 13 Feb 2021 4:21 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி அருகே காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேச்சேரி:
நங்கவள்ளி அருகே காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சடையம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). நெசவு தொழிலாளி.
இவரும் அந்த பகுதியை சேர்ந்த மாலினி (19) என்பவரும் காதலித்து வந்தனர். ஆனால் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வீட்டுக்கு தெரியாமல் பாரியூரில் உள்ள அம்மன் கோவிலில் காதல்ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
பின்பு குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பிரசாந்த்-மாலினி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி சமரசம் செய்தபோது பிரசாந்தின் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.  ஆனால் மாலினியின் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாலினி, பிரசாந்துடன் சென்றுவிட்டார். பின்னர் மாலினி மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி 4 ரோடு பகுதியில் உள்ள பிரசாந்தின் சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தனர்.
காரில் கடத்தல்
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பிரசாந்த், மாலினி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டின் அருகில் இருந்தனர். அப்போது மாலினியின் தந்தை ராஜேந்திரன் மற்றும் நல்லகுமார், கோகுல் உள்பட 11 பேர் 2 கார்களில் வந்து பிரசாந்த் மற்றும் அவரது உறவினர்கள் லட்சுமி, பிரியா ஆகிய 3 பேரையும் தாக்கிவிட்டு மாலினியை காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து பிரசாந்த் நங்கவள்ளி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மாலினியின் தந்தை ராஜேந்திரன் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story