தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தல்
தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தினார்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கருப்பம்புலம் பி.வி.தேவர் அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கூடுதல் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி தரம் மேம்படும் வகையில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் விளைவாக தற்போது கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம், நகர்புற மாணவர்களை மிஞ்சும் அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. 35 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும், 40 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் சமந்தான் குப்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகவும், கருப்பம்புலம் பி.வி. தேவர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி
கொரோனா காலத்திலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது விடாமுயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், அகரம் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், வேதாரண்யம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் நமச்சிவாயம், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஊராட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கூட்டுறவு கடன் சங்க கட்டிட திறப்பு விழா
இதேபோல வேதாரண்யம் தாலுகாவில் உள்ள நவீனமாயமாக்கப்பட்ட தேத்தாக்குடி வடக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிட திறப்பு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். விழாவில் சங்கத்தலைவர் கிரிதரன், மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story