தமிழகத்தில் 3 மாவட்டங்களில் தொற்று இல்லை - மேலும் 483 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக நேற்று தொற்று ஏற்படவில்லை. மேலும் 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 291 ஆண்கள், 192 பெண்கள் என மொத்தம் 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 142 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 45 பேரும், திருவள்ளூரில் 21 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் இருவரும், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், தர்மபுரி, அரியலூரில் புதிதாக பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில், 12 வயதுக்குட்பட்ட 23 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 104 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 63 லட்சத்து 41 ஆயிரத்து 762 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 173 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 162 ஆண்களும், 3 லட்சத்து 33 ஆயிரத்து 976 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 631 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த ஜனவரி 8-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் வந்த 1,849 பேரில், 1,568 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,539 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 22 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அரசு, தனியார் மருத்துவமனையில் தலா 3 பேர் என மொத்தம் 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனியில் தலா ஒருவரும் என 6 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12,408 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 486 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 137 பேரும், கோவையில் 46 பேரும், செங்கல்பட்டில் 34 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 480 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் 4 ஆயிரத்து 285 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 946 பேர், வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,040 பேர், ரெயில் மூலம் வந்த 428 பேர், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 607 பேர், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 55 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story