ஊதிய உயர்வு கேட்டு ரேஷன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழ்நாடு கூட்டுறவு ரேஷன் கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொ.மு.ச பேரவை பொருளாளர் கி.நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 5 ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது சம்பந்தமாக பல்வேறு அமைப்புகள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு கொடுத்த பிறகு, அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி அந்த குழு தயாரித்த அறிக்கை, அரசிடம் கிடைக்கப்பெற்ற பின்பும், அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கொள்கை ரீதியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்கிற காரணத்தினால் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. எனவே அரசு விரைந்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்’ என்று கூறினார்.
இதையடுத்து, அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ரேஷன் கடை ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story